கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம்: விதிமுறைகளை பின்பற்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் விதிமுறைகளை பின்பற்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? என தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

Update: 2022-08-17 16:37 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார்.

மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூகஆர்வலர் சரவணன் என்பவர், மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு சட்டவிதிகளின்படி பள்ளி- கல்லூரி கட்டிடங்களில் முதல் தளத்திற்கு மேல் 2, 3-வது தளங்கள் செல்லக்கூடிய நிலையில் திறந்தவெளியில் கட்டிடம் இருக்கக்கூடாது, அது முழுமையாக மறைக்கப்பட வேண்டும். இதுபோன்று இருந்தால்தான் மாணவர்களின் தற்கொலை உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. மாணவி ஸ்ரீமதி இறந்த பள்ளியில் 3-வது தளத்தில் இருந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. 3-வது தளத்தில் இதுபோன்று மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பாக அங்கே சுவர்கள் மூடப்படாததன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

சக்தி மெட்ரிக் பள்ளி மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி- கல்லூரி கட்டிடங்களில் இதுபோன்று அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருக்கின்றன. முதல் தளத்திற்கு மேல் கட்டிடங்கள் செல்லும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், திறந்தவெளியில் இருக்கக்கூடாது, மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் சக்தி பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

வழக்காக பதிவு

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், அதனை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு விரைவில் நோட்டீசு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்