பருத்தி அறுவடை செய்து வியாபாரிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
பருத்தி அறுவடை செய்து வியாபாரிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
முதுகுளத்தூர்
சீசன் முடிவடையும் நிலையில் முதுகுளத்தூர் அருகே பல கிராமங்களில் பருத்தி அறுவடை செய்து வியாபாரிகளிடம் அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பருத்தி அனுப்பும் பணி
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருவதால் நெல் விவசாயம் என்பது குறைவு தான். நெல் விவசாயத்தை விட மிளகாய் மற்றும் பருத்தி விவசாயம் மாவட்டத்தில் பல கிராமங்களில் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர், தேரிருவேலி, வடக்கு மல்லல், தெற்கு மல்லல், காக்கூர், தாழியாரேந்தல், மட்டியாரேந்தல் பல கிராமங்களிலும் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டின் விவசாயம் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே முதுகுளத்தூரில் பல கிராமங்களில் பருத்தி விவசாயம் முடிவடைந்து விட்ட நிலையில் காக்கூர், தாழியாரேந்தல், திருஉத்திரகோசமங்கை, நல்லாங்குடி, தேரிருவேலி உள்ளிட்ட கிராமங்களில் இன்னும் பருத்தி விவசாயம் நடைபெற்று வருகின்றது. பல கிராமங்களில் பருத்தி செடிகளில் இருந்து எடுக்கப்பட்ட பஞ்சுகளை பிரித்து வியாபாரிகளிடம் கொடுக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைச்சல்
இதுகுறித்து காக்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் நன்றாகவே இருந்துள்ளது. சீசன் தொடங்கிய ஒரு சில மாதத்தில் பருத்தி விலை குறைவாக இருந்தாலும் அதன் பின்னர் ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரையிலும் விலை போனது. தற்போது தான் விலை ஓரளவு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களோடு பருத்தி விவசாயம் முழுமையாக முடிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.