காபி பழங்கள் அறுவடை

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காபி பழங்கள் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-08 18:45 GMT

கூடலூர், 

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காபி பழங்கள் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காபி பழங்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பச்சை தேயிலைக்கு இணையாக உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால், கூடலூர் பகுதியில் காபி, இஞ்சி, குறு மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்களும் விளைகிறது. தற்போது காபி செடிகளில் பழங்கள் விளைந்து காணப்படுகிறது.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் காபி பழங்கள் அறுவடை செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த மாதம் அறுவடை பணி தொடங்க வேண்டிய நிலையில் தொடர் மழை பெய்தது. இதனால் செடிகளில் இருந்த காபி பழங்கள் உதிர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் மாத இறுதியில் மழை நின்றது. தொடர்ந்து பகலில் நன்கு வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

அறுவடை மும்முரம்

இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காபி பழங்களை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோல் சிறு விவசாயிகளின் தோட்டங்களிலும் காபி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காபி பழங்கள் பறித்து முதலில் நன்கு காய வைக்க வேண்டும். தொடர்ந்து பழங்களில் உள்ள விதைகள் தனியாக பிரிக்கப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது. பெரும்பாலும் மொத்த வியாபாரிகள் காபி விதைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் காபி விதைகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

தற்போது பச்சை காபி விதைகள் கிலோ ரூ.33, காய வைத்த காபி விதைகள் கிலோ ரூ.110-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்