மழையால் அறுவடை பணி பாதிப்பு

தொடர்ந்து பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நனைந்து சாய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-02-02 18:45 GMT

பனைக்குளம், 

தொடர்ந்து பெய்துவரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நனைந்து சாய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

2 நாட்களாக மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கை திரிகோணமலை மட்டக்களப்பு இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதுமே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மண்டபம், வேதாளை, பிரப்பன் வலசை, உச்சிப்புளி, தாமரைக்குளம், மேலகளிமண்குண்டு, ரெகுநாதபுரம், பெருங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்தது.

இதனிடையே உச்சிப்புளி அருகே இரட்டையூரணி, தாமரைக்குளம், கீழ களிமண்குண்டு, மேலகளிமண் குண்டு, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெற்பயிர்கள் அறுவடை ஒரு புறம் நடந்து வருவதோடு அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

பயிர்கள் சாய்ந்தன

இதுகுறித்து தாமரைக்குளம் மற்றும் கீழ களிமண் குண்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது. பருவமழை சீசனில் இந்த ஆண்டு மழையே பெய்யவில்லை. குறிப்பாக நெற்பயிர்கள் விளைச்சலுக்கு தேவையான நேரத்தில் முழுமையாக மழை பெய்யவில்லை. இதனால் நெற்பயிர்கள் சரியான விளைச்சல் கூட இல்லாமல் சாவியாகவே இருந்தது. அந்த சாவியாக விளைந்துள்ள நெற்பயிர்களை தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பயனுள்ள நேரத்தில் மழை பெய்யாமல் மழையோ, தண்ணீரே வேண்டாம் என்ற நிலையில் இருந்து வரும் நேரத்தில் பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ஓரளவு விளைந்துள்ள நெற்பயிர்களும் மீண்டும் முளைத்து வளர தொடங்கி விடும் என்றனா்.

விளைச்சலுக்கு தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் அறுவடை நேரத்தில் பெய்து வரும் மழையால் பயிர்கள் சாய்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்