நெல் அறுவடை பணி தீவிரம்-நெல்களமாக சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்கள் சாலைகளை நெல்களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்கள் சாலைகளை நெல்களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நெல் அறுவடை பணி
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களும் வறட்சியான மாவட்டமாக இருந்து வரும் வேளையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில் கண்மாய்கள், ஊருணிகள் தூர்வாரப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்றது. இதையடுத்து ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது மழை தண்ணீர் கண்மாய்களுக்கு வந்து சேர்ந்தது. இந்த தண்ணீரை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வந்தனர். அதேபோல் இந்தாண்டும் பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பெய்தது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இங்குள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்கள் நிரம்பி மறுகால் போனது.
இதையடுத்து இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வயல்களில் விவசாய பணிகளை மேற்கொண்டு நெல் பயிர்களை நடவு செய்து பராமரித்து வந்தனர். அதிலும் குறுகிய கால பயிர்களை பயிரிட்டு பராமரித்தனர். தற்போது இந்த நெல் பயிர்கள் அறுவடை பருவத்தை அடைந்ததால் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாலையில் களம்
சிங்கம்புணரி, பிரான்மலை, திருப்பத்தூர், காரைக்குடி, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது அறுவடை எந்திரம் மூலம் பல்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான், தி.சூரக்குடி, பலவான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் அறுவடை செய்த நெல் கதிர்களை தலை சுமையாக எடுத்து வந்த கிராம மக்கள் சாலையோரத்தில் அவற்றை அடித்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:-
தற்போது அறுவடை சீசன் தொடங்கி உள்ளதால் போதிய ஆட்கள் இந்த பணிக்கு வருவதில்லை. இதனால் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்து வருகிறோம். மேலும் பல்வேறு கிராமங்களில் நெல்களம் இல்லாததால் தற்போது கிராமத்தின் வழியாக செல்லும் சாலைகளில் போதிய போக்குவரத்து வசதியில்லாததால் அந்த சாலையை களமாக பயன்படுத்தி நெல் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினர்.