அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை
அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளம்பர பேனர்கள்
கடலூர் மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விளம்பர பதாகைகள் வைக்கும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர் மாநகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள், பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் மீது உரிய அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், அதனால் உயிர்ச்சேதங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.
அபராதம்
எனவே, கடலூர் மாவட்டத்தில் முறைகேடான வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வருங்காலத்தில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.