தளி
ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு புரட்டாசி மாதம் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டும் வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
அந்த வகையில் 2- வது சனிக்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது பூஜை சாமான்கள் மற்றும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில் உடுமலை வனச்சர அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள், அதன் பயன்பாட்டால் வனத்தின் தன்மையை பாதிக்கப்படுவது மற்றும் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து அறிவிப்பு பதாகையுடன் பொதுமக்களுக்கு எடுத்து உரைக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டது. அத்துடன் கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய மாற்று பைகளும் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற சனிக்கிழமைகளில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.