ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை
ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு,சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு,சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
கலந்துரையாடல் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜவ்வரிசி தொழிலில் சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மரவள்ளிக் கிழங்கு விவசாயம், ஜவ்வரிசி உற்பத்தி, ஸ்டார்ச் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தொழில் துறை வளம் பெற்று வருகிறது. மரவள்ளி கிழங்கு விவசாயிகளை சேகோசர்வில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜவ்வரிசி உற்பத்தியில் தவறு மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தனியார் சேகோ உற்பத்தி ஆலைகளில் முறையான சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் மரவள்ளி விவசாயிகள் அரசுடன் இணைந்து செயல்பட்டு ஜவ்வரிசி உற்பத்தியில் சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி விற்பனை செய்யும் போது ஏற்படும் செலவு தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான ஜவ்வரிசியை தயார் செய்ய வேண்டும். ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் 24 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 44 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.
கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், கலெக்டர் கார்மேகம், தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) சிவகுமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சருடன் வாக்குவாதம்
இதனிடையே சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த தி.மு.க. பிரதிநிதி கோவிந்தன் நேற்று கூட்டரங்கிற்கு வந்தார். அவர் கடந்த 2001-ம் ஆண்டு சேலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனது மகன் இறந்து விட்டார். மற்றொரு மகனுக்கு அரசு வேலை வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அரசு வேலை வழங்கவில்லை. எனவே அரசு வேலை வழங்கக்கோரி, அவர் திடீரென்று அமைச்சர் கே.என்.நேருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.