பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை; கணவருக்கு 3 ஆண்டு சிறை

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-07-07 16:14 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி என்ற ஜெயமேரி. இவரது மகன் கண்ணன் என்ற செல்வின் பால். கூலி தொழிலாளி. இவருக்கும், கோரம்பள்ளத்தை அடுத்த மடத்தூர் ஊரை சேர்ந்த செல்வி (36) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 17 பவுன், ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக பெண் வீட்டினர் கொடுத்து உள்ளனர். பின்னர் 6 மாதம் கழித்து கர்ப்பிணியாக இருந்த செல்வியை மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி, கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒருநாள் செல்வின் பால் இரும்பு கத்தியை சூடுபடுத்தி தனது மனைவிக்கு சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் செல்வின் பால், ஜெயமேரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டி்ல நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி குபேரசுந்தர் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட செல்வின் பாலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இருந்து ஜெயமேரி விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்