ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அவினாசி வீர ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் இரவு 8.30மணி அளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அவினாசி, சேவூர், கருவலூர், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பல்லடம் அஞ்சலக வீதியில் உள்ள காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பின்னர் ஆஞ்ச நேயருக்கு வெண்ணெய், சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சந்தனக்காப்பு, அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்லடம் செல்வ விநாயகர் கோவில், அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சேவூர்
சேவூர் தெப்பக்குளத்து ஆஞ்சநேயருக்கு நேற்று அதிகாலை பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 900 வடை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோட்டை அனுமந்தராயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மங்கலத்தை அடுத்த நீலிகணபதிபாளையம்- கருடபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ீபயவரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அபயவரத ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.