தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே மதுகுடித்ததை காதலி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி கேசவன். இவரது மகன் விக்னேஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிபார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை.
இது குறித்து விக்னேசின் தாய் செல்வி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பொட்டியம் சுடுகாடு சாலையில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் விக்னேஷ் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விக்னேசும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
காதலி திட்டியதால்...
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு செல்போனில் தனது காதலியிடம் விக்னேஷ் பேசியுள்ளார். அப்போது விக்னேஷ் மதுகுடித்ததை அந்த பெண் கண்டித்துள்ளார். மேலும் இனி மது குடித்தால், என்னிடம் பேசாதே என அந்த பெண் திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காதலி திட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.