தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் எழில் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 48). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், பழனியாண்டி, பாஸ்கர் என 2 மகன்களும் உள்ளனர். அண்ணாதுரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் அண்ணாதுரைக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணாதுரை வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அன்னக்கிளி மதியம் அருகே உள்ள ஒரு காட்டிற்கு மாடு மேய்க்க சென்றார். அப்போது காட்டில் அண்ணாதுரையின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததை கண்டார். பின்னர் அன்னக்கிளி தனது கணவரை சுற்றும், முற்றும் தேடினார். அப்போது அண்ணாதுரை இலவம் பஞ்சு மரத்தில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கில் தொங்கினார். அவரது வலது கால் மரத்தில் சிக்கியவாறு இருந்தது. இதனை கண்ட அன்னக்கிளி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.