கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்-கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை
கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பரமக்குடி,
கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பொதுப்பேரவை கூட்டம்
பரமக்குடி-எமனேஸ்வரம் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தின் 62-வது பொதுப்பேரவை கூட்டம் எமனேஸ்வரம் கே.டி.ஆர். மகாலில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜோதி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அனந்த கிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். கூட்டுறவு பணியாளர்களுக்கு பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யில் விலக்கு
தள்ளுபடி மானியம் உச்சவரம்பு நீக்கி விற்பனைக்கு முழுமையான தள்ளுபடி நுகர்வோர்களுக்கு கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். சங்க உற்பத்திக்கு தேவைப்படும் கச்சா பொருள்களை கொள்முதல் செய்ய உதவி இயக்குனர் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களை வலியுறுத்தி மாநில கூட்டமைப்பின் தலைவர் நடன சபாபதி, துணைத்தலைவர் பரமசிவம், செயலாளர் சவுண்டப்பன், பொருளாளர் வெங்கடேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், ஆலோசகர்கள் ஆத்மா ராவ், பூர்ணாச்சாரி ஆகியோர் பேசினர். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹரி, கணேஷ் பாபு, கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், ராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் உதவி செயலாளர் கோபி நன்றி கூறினார்.