எலக்ட்ரீசியன் வீட்டில் திருட முயன்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
வேப்பந்தட்டையில் எலக்ட்ரீசியன் வீட்டில் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
எலக்ட்ரீசியன்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு மேல்நிலை பள்ளி செல்லும் சாலையில் வசித்து வருபவர் குமார் (வயது 40), எலக்ட்ரீசியன். இவர் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பந்தட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவிற்கு சென்று சாமி கும்பிட்டார்.
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது வீட்டிற்குள் மர்ம ஆசாமி ஒருவர் இருப்பதும், அவர் மாடிப்படி வழியாக தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
போலீசில் ஒப்படைப்பு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார், திருடன் திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த ஆசாமியை சுற்றிவளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 23) என்பதும், வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதும் தெரியவந்தது. மேலும் குமார் வீட்டில் திருடிய நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வெங்கடேசை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டையில் கடந்த ஒரு வாரத்திற்குள் 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.