பணத்துடன் கீழே கிடந்த கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
பணத்துடன் கீழே கிடந்த கைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட துணை கருவூலத்தின் கூடுதல் துணை கருவூல அலுவலராக சுரேஷ்கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் போது அங்கே கீழே கிடந்த கைப்பையை எடுத்து பார்த்துள்ளார். அதில், ரூ.52 ஆயிரம், செல்போன் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவை இருந்துள்ளது. இதையடுத்து சுரேஷ்கண்ணன் உடனடியாக அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேரில் வந்து இதுகுறித்து விவரம் தெரிவித்து அந்த கைப்பையை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், கைப்பையின் உரிமையாளர் குழுமூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மதியழகன் என்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மதியழகனும் போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். விசாரணைக்கு பின்னர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பணம், செல்போன், வங்கி கணக்கு புத்தகம் இருந்த கைப்பையை அதன் உரிமையாளர் மதியழகனிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சுரேஷ்கண்ணனின் நற்செயலை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார். அப்போது அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.