பாதியாக குறைந்த பருத்தி விலை
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் பருத்தி பஞ்சு எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் பருத்தி விலை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவூர்
பருத்தி சாகுபடி
சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான தேவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக கொட்டாயூர், செட்டிபட்டி, பாலிருச்சம்பாளையம், சென்றாயனூர், வட்ராம்பாளையம், செங்கானூர், கல்வடங்கம், குள்ளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிபட்டி, மயிலம்பட்டி, குஞ்சாம்பாளையம், தண்ணிதாசனூர், மோட்டூர், மேட்டுபாளையம், நல்லதங்கியூர், பொன்னம்பாளையம், ஒக்கிலிப்பட்டி, ஒடசக்கரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பி.டி. ரகமான ஆர்.சி.எச் 659 ராசி ஆங்கூர் சபரி, சுரபி போன்ற பருத்தி ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் விவசாய வயல்களில் டிராக்டர் மூலம் உழவு செய்து பாத்தி கட்டி, கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி விதைகளை ஊன்றி சாகுபடி செய்தனர். இதையடுத்து பருத்தி சாகுபடி நிலங்களில் தண்ணீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், பருத்தி செடிகளுக்கு மண் அணைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அறுவடை
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயிள் பராமரித்து வந்தனர். சாகுபடி செய்யப்பட்டு 5 மாதங்கள் முடிந்துள்ள வயல்களில் பருத்தி காய்கள் காய்த்து பஞ்சு வெடிக்க தொடங்கி உள்ளன. இதையடுத்து தற்போது் இந்த பகுதிகளில் பருத்தி அறுவடை செய்து பஞ்சு பிரித்து எடுக்கும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு வியாபாரிகள் விவசாயிகளிடம் பருத்தியை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.130 என்ற விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விலைவீழ்ச்சி
ஆனால் தற்போது பருத்தி எடுக்கும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு பருத்தி விலை கடந்த ஆண்டை காட்டிலும் சரிபாதியாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.54 முதல் ரூ.65 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த விலை சரிவு ஒருபுறம் இருக்க தற்போது தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பருத்தி செடிகளில் இலைகள் பழுத்து கருகி உதிர்ந்து வருகின்றன. இதனால் பருத்தி செடிகளில் பருத்தி பஞ்சு இல்லாமல் வயல்களில் கருகிய நிலையில் ஆங்காங்கே செடிகள் காட்சியளிப்பது விவசாயிகளை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
இவ்வாறு அடிக்கு மேல் அடியாக பருத்தி அறுவடை நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் தேவூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாகவும் பருத்தி மகசூல் குறைந்த நிலையில், விலையும் பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மேலும் பருத்தி சாகுபடி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தேவூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.