முத்தூரில் ஜனவரி 1-ந் தேதி முதல் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சவரத்தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம்
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் முத்தூர் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள நல்லதாய் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க முத்தூர் தலைவர் ஆர்.சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்யப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகள் அமல்படுத்தி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைப்பிடிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது, முடி திருத்தம் மற்றும் சவரத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு காரணமாக வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் முத்தூர் பகுதி முடி திருத்தும் கடைகள் அனைத்திலும் முடி திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
கட்டணம் நிர்ணயம்
இதன்படி பேஸ் பிளீச்சிங் செய்வதற்கு ரூ.500, பிளீச்சிங் மட்டும் ரூ.350, கட்டிங், சேவிங் ரூ.200, பெரியவர்களுக்கு கட்டிங் மட்டும் ரூ.150, சிறுவர்களுக்கு கட்டிங் மட்டும் ரூ.120, சேவிங் மட்டும் ரூ.70, தாடி டிரிம் செய்வதற்கு ரூ.80, கட்டிங், சேவிங், டை அடிப்பதற்கு ரூ.300 என விலை நிர்ணயம் செய்து வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பிரதி மாதந்தோறும் அமாவாசை நாட்களில் முத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து முடி திருத்தும் கடைகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிப்பது என்றும்,
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமாவாசை நாள் வந்தால் அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை முடி திருத்தும் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முடிவில் முடி திருத்தும் கடைக்காரர்களுக்கு அனைவருக்கும் புதிய விலை பட்டியல் அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தனபால் நன்றி கூறினார்.