ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் கொலை
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட தளி அருகே உள்ள பி.பி.பாளையத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 46). இவர் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகவும் இருந்து வந்தார். நரசிம்மமூர்த்தி கடந்த மாதம் 2-ந் தேதி இரவு பி.பி.பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்து, அடித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கோர்ட்டில் சரண்
இதனிடையே நரசிம்மமூர்த்தியை கொலை செய்ததாக கூறி தாரவேந்திரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாக்கம்மாவின் மகனான திம்மையா என்ற ரவி (38) மற்றும் பெரிய மல்லசோனையை சேர்ந்த சிவமல்லையா என்ற கரியன் (27) ஆகிய 2 பேரும் சேலம் மாவட்டம் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
மேலும் திம்மையாவின் தம்பிகளான கிருஷ்ணா (36), சங்கரப்பா (30), மாதேஷ் (29), பி.பி.பாளையத்தை சேர்ந்த தியாகராஜ் (22), காளேநட்டி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் பிரசன்னா (48), கக்கதாசத்தை சேர்ந்த ராகேஷ் (21), பெரிய மல்லசோனையை சேர்ந்த புட்டமாரி (31), தளி கொத்தனூரை சேர்ந்த மல்லேஷ் (25), முனிராஜ் (25) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மமூர்த்தி கொலைக்கு மூளையாக செயல்பட்ட திம்மையா, சிவமல்லையா, மல்லேஷ் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.