தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு:சேலம் மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை

தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு:சேலம் மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.

Update: 2023-07-08 19:56 GMT

சேலம்,

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சேலம் மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.

தொடர் மழை

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, மேச்சேரி, பனமரத்துப்பட்டி, மல்லூர், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் மற்றும் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து சேலம் டவுனில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குண்டு மல்லி விளைச்சல் பாதித்து அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த 4-ந் தேதி ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ரூ.50 உயர்ந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தேவை அதிகரிப்பு

முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவையால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதேபோல், ஒரு கிலோ முல்லை ரூ.260-க்கும், வெள்ளை மற்றும் மஞ்சள் அரளி ரூ.80-க்கும், சன்னமல்லி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குண்டுமல்லி உள்பட அனைத்து வகையான பூக்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்