வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி

ஆடி குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-07-11 23:15 GMT

மேட்டுப்பாளையம்

ஆடி குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குண்டம் திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 30-ஆம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. பின்னர் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 25-ந் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குண்டம் கண் திறப்பு

குண்டம் திருவிழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 33 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட குண்டத்தை சுற்றிலும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பின்னர் நாதஸ்வர இசை, மேளதாளம் முழங்க குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா தலைமையில் கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி முன்னிலையில் கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகள் செய்து குண்டத்தில் கண் திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு குண்டத்தை வலம் வந்து வழிபட்டனர்.

ஆலோசனை கூட்டம்

அதனைத்தொடர்ந்து திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறைகள் அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் கோவில் அலுவலக வளாகத்தில் மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமை தாங்கினார். பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா முன்னிலை வகித்தார். தாசில்தார் சந்திரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார், துணைத்தலைவர் தங்கராஜ், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பாஸ்கரன், விவேகானந்த், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் லூர்துஏசு, தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், உதவி மின்பொறியாளர் சுகுமார், வனத்துறை சார்பில் கருணாகரன் மற்றும் அரசு பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி நன்றி கூறினார்.

பக்தர்களுக்கான வசதிகள்

கூட்டத்தில் காவல்துறை சார்பில் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பது, நகராட்சி சார்பில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், தேக்கம்பட்டி ஊராட்சி சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் விழா காலங்களில் தடையின்றி சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழாவின் முக்கிய நாட்களில் பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் வசதி செய்துகொடுக்க வேண்டும், தீயணைப்பு துறை சார்பில் 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்