துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்-கலெக்டர் விஷ்ணு உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உரிமம்
நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கி உரிமங்கள் வைத்திருக்கும் உரிமதாரர்கள் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் படைக்கலன்களில் வருகிற 31-ந் தேதி வரை அனுமதி உள்ள ரிவால்வர், பிஸ்டல், ரைபிள், டி.பி.பி.எல் மற்றும் எஸ்.பி.பி.எல் உரிமங்களை அடுத்த ஆண்டுகளுக்கு புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் முடிவடையும் தேதிக்கு முன்பு நெல்லை மாவட்ட கலெக்டர் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் புதுப்பிக்கும் வகைக்கு உரிய கட்டண தொகையை இணையவழியில் இ-செல்லான் மூலமாக "02202-Director General of Police, Acct Code- 005500800AE29001" என்ற கணக்குத்தலைப்பில் அரசு இ-சேவை மையம் அல்லது பிரவுசிங் சென்டர் மூலம் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் அதன் 2 நகல், அசல் உரிமம், இ-செல்லான் ரசீது, குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள முத்திரை கட்டண வில்லையும் ஒட்டி அனுப்ப வேண்டும்.
முகவரி மாற்றம்
நெல்லை மாநகர எல்லைப்பகுதியில் குடியிருப்பவர்கள் மட்டும் தங்கள் புதுப்பித்தல் மனுவை மேற்கண்ட ஆவணங்களுடன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும். தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநகர பகுதி படைக்கலன் உரிமங்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அதிகார வரம்பிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உரிமங்களை 2023, 2024, 2025, 2026, 2027 ஆகிய 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
முகவரி மாற்றம் ஏதும் இருந்தால் அதன் விவரத்துடன் முகவரி மாற்றம் சம்பந்தமான தக்க ஆதாரத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். அசல் உரிம புத்தகத்தில் சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் காவல் துறையினரிடம் படைக்கலனை காண்பித்து சரிபார்க்கப்பட்டது என கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை திரும்ப அனுப்புவதற்கு உரிமதாரர்கள் சரியான முகவரியை தெளிவாக குறிப்பிட்டு தேவையான அஞ்சல் வில்லை ஒட்டிய கவர் ஒன்றினை இணைத்து அனுப்ப வேண்டும்.
ஒப்படைக்க வேண்டும்
ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்கள் கிழிந்து, சிதைந்து அல்லது உபயோகிக்க முடியாத நிலையில் உள்ள உரிமங்களுக்கு மாற்று நகல் கோரி அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும் புதுப்பித்தல் தொடர்பாக உரிமதாரர்களை நேரடியாக விசாரணைக்கு அழைக்கும்போது தனது படைக்கலனை கொண்டுவர வேண்டும்.
உரிமங்களை புதுப்பித்து கொள்ளாதவர்கள், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி தம்மிடம் இருக்கும் துப்பாக்கியை அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் அல்லது ஆயுதங்களை பாதுகாக்கும் உரிமம் பெற்ற அரசு கிட்டங்கியில் ஒப்படைத்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.