கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக தேர்வு கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என மாணவர்கள் மகிழ்ச்சி

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழக அரசின் தகைசால் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதால் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-09-15 18:45 GMT

கூடலூர்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழக அரசின் தகைசால் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதால் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

நீலகிரி மாவட்டத்தில் அதிகமானவர்கள் படிக்கும் பள்ளியாக கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி சென்னையில் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இதில் மாநிலம் முழுவதும் ரூ.171 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளை தகை சார் பள்ளிகளாக தரம் உயர்த்த அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அரசாணை வர தாமதமானது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.

தகைசால் பள்ளியாக தேர்வு

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து முறையாக கல்வி அதிகாரிகள் மற்றும் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றறிக்கை வந்தது. அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தகை சார் பள்ளியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- தகைசால் பள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும். அன்றாடம் படிக்கும் பாடங்களுக்கு இடையே இசை, நடனம், செயல்முறை அறிவியல், விளையாட்டு உட்பட பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள். குறிப்பாக ஒவ்வொரு மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து வெளிப்படுத்தப்படும்.தொடர்ந்து உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்