சிமெண்டு மூடை ஏற்றிய தகராறில் தாக்கப்பட்ட காவலாளி சாவு

கொல்லங்கோடு அருகே சிமெண்டு மூடை ஏற்றிய போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட காவலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-11-30 19:28 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே சிமெண்டு மூடை ஏற்றிய போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட காவலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

காவலாளி மீது தாக்குதல்

கொல்லங்கோடு அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 53). இவர் சூழால் பகுதியில் ஒரு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். அதே கடையில் காரோடு பகுதியை சேர்ந்த பினு (40) என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கடையில் இருந்து பினு ஆட்டோவில் சிமெண்டு மூடைகளை ஏற்றினார். அப்போது அங்கு பணியில் இருந்த அர்ஜூனன், அவரிடம் 'எத்தனை மூடைகள் வேண்டும்' என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பினு, அர்ஜூனனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார்.

இதில் படுகாயமடைந்த அர்ஜூனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை வழக்கு

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அர்ஜூனன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பினுவை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்