நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம்

Update: 2023-05-21 18:36 GMT

மானாவாரியில் பயிர் செய்யப்படும் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் சித்திரை செல்வி விளக்கம் அளித்து உள்ளார்.

உயர் விளைச்சல் ரகங்கள்

நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடைமழை பெய்து உள்ளது. இம்மழையை பயன்படுத்தி மானாவாரியாக சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரினை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலக்கடலையில் டி.எம்.வி-14, தரணி மற்றும் கே-1812 ஆகிய உயர் விளைச்சல் ரகங்களை இப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீட்டருக்கு 10 செ.மீ இடைவெளியில் விதைத்து, ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க வேண்டும். ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளை பயன்படுத்தி, சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும். இதனால் நல்ல மசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பயிர்பாதுகாப்பு முறைகள்

விவசாயிகளுக்கு தேவையான அளவு நிலக்கடலை விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தேவைப்படும் நிலக்கடலை ரகங்களை வேளாண்மைதுறை அலுவலர்கள் மூலம் மானிய விலையில் பெற்று, விதைப்பண்ணை அமைக்கலாம். நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் மக்கிய தொழுவுரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.

இதே போன்று விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்கும் பொருட்டு, விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி (அல்லது) 10 கிராம் சுடோமோனஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்த கலவையில் உயிர் உர விதை நேர்த்தி செய்து, நிழலில் நன்கு உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். மேலும் மானாவாரி நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளிபுழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளதால் தேவையான பயிர்பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்