திருமண செலவுக்கு பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

கடலூர் அருகே திருமண செலவுக்கு பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-27 19:31 GMT


கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய 2-வது மகன் ரகுவரன்(வயது 32). லாரி மெக்கானிக்கான இவருக்கும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் வருகிற 10-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி இரு வீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வந்தனர். திருமண வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

தந்தையை இழந்த ரகுவரன், தாயுடன் சேர்ந்து திருமண வேலைகளை செய்து வந்தார். ஆனால் திருமண செலவுக்கு போதிய பணம் இல்லை என்று தெரிகிறது. இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தாராம்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ரகுவரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த ரகுவரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி அவரது தாய் கலையரசி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரத்தில் திருமண கோலத்தில் பார்க்க வேண்டிய ரகுவரனை பிண கோலத்தில் பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்