உறுப்பினர்கள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்து தகவல் தெரிவிக்க வேண்டும்
நகரமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராசன் அறிவுறுத்தினார்.
நகர மன்ற கூட்டம்
குடியாத்தம் நகர மன்ற கூட்டம், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பெ.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் பேசியதாவது:-
கவிதாபாபு: எனது வாடில் சரியாக துப்புரவுப் பணிகள் நடைபெறுவது இல்லை, கால்வாய் தூர்வாரவில்லை. எங்கள் பகுதி் பொதுமக்களே ஒரு இடத்தில் தூய்மை பணியை மேற்கொண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழியருக்கு நிதி உதவி
துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி: குடியாத்தம் நகராட்சியில் மின் விளக்கு பராமரிப்பு பணியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பிச்சாண்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்விளக்கு சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு நகர மன்றத்தின் சார்பாக அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றார்..
இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவரும் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக நகர மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நகர மன்ற கூட்டத்திலேயே ரூ.1 லட்சம் வரை வழங்கினர். அந்த தொகையை உடனடியாக பாதிக்கப்பட்ட மின் பணியாளர் வழங்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.
பதிவு செய்ய வேண்டும்
உறுப்பினர் ஜி.எஸ்.அரசு: நகர மன்ற உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுவில் நகர மன்ற உறுப்பினர்கள் குறைகளை பதிவு செய்தால் அதனை நிவர்த்தி செய்து அதன் போட்டோ உள்ளிட்ட பதிவுகளை அந்த குழுவில் பதிவு செய்ய வேண்டும். மழையால் பழுதான சாலைகளை சீர் செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
ஜாவித் அகமது: நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
சிட்டிபாபு: நகராட்சி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
விஜயன்: அடிக்கடி மெயின் குடிநீர் குழாய் பழுதாவதால் தண்ணீர் வர தாமதமாகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.குகன்: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் ஒரே டாக்டர் உள்ளதால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். தற்போது காய்ச்சல் அதிகமாக உள்ளதால் இரவு நேரத்தில் அதிக அளவு நோயாளிகள் வருகின்றனர். எனவே கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் வருகிற ஜனவரி மாதம் முதல் நகராட்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு வர உள்ளதால் தொடர்ந்து உறுப்பினர்கள் கூறிய பணிகள் நடைபெறும். உறுப்பினர்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் பதிவு செய்து அந்த குறைகளை நிவர்த்தி செய்தபின் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் உடனடியாக நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.