கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 13 பேர் மனு கொடுத்தனர். மேலும் அஞ்சல் வழியாக 7 மனுக்களும் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
அதைத்தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்பீட்டுத் திட்ட அட்டையை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் இணையதள முகவரியான www.kallakurichi.nic.in என்ற இணையத்தின் வாயிலாக மருத்துவ காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நிறைவேற்றி அதன் விபரங்களை ஓய்வூதியதாரர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மலர்விழி, மாவட்ட கருவூல அலுவலர் இளங்கோபிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயகுமார், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.