குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் கலெக்டர் அலுவகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-11-21 18:35 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 394 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 71 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 12 மாற்றுத்திறனாளி மற்றும் பயனாளிகளுக்கு ரூ.2,31,549 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கேபிள் டி.வி. உரிமையாளர்கள்

கூட்டத்தில் கரூர் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறோம். மேலும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு கேபிள் டி.விக்கு உரிய முறையில் பதிவு செய்து கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறோம். 2017-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து சிக்னல் தடை ஏற்பட்டுள்ளது. இதனை இன்றளவும் சரி செய்யாமல் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அலைக்கழித்து வருகிறது.

இதுபோன்ற பிரச்சினைகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் சந்தாதாரர்கள் டி.டி.எச். முறைக்கு மாறி வருகின்றன. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகின்றது. இப்பிரச்சினையானது கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களாகிய எங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் கடந்த 3 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே உடனடியாக இப்பிரச்சினையை சரிசெய்து எங்களின் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மரங்களை காப்பாற்ற வேண்டும்

கரூர் லிங்கத்தூரை சேர்ந்த சின்னசாமி என்பவர் ெபாதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- உப்பிடமங்கலம் பேரூராட்சியில் பல்வேறு புல எண்களில், ஓடை புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு, வாரிப்புறம்போக்கு, ஏளி, குளப்புறம்போக்கு என அரசின் நிலங்கள் பல உள்ளன.

அதில் பனை, வேம்பு என்பன போன்ற மரவகைகள் விரவியுள்ளன. அதை வெட்டுவதற்கு ஏலம் விடப்படவுள்ளதாகவும், ஏலம்விட்டு விட்டதாகவும் பொதுமக்களாகிய நாங்கள் அறிகிறோம். இந்த இயற்கை வளங்களான மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் எங்கள் பகுதியின் இயற்கை சமன்பாடு பாதிக்கப்படும். எனவே உடனடியாக தகுந்த தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் மண்ணையும், மக்களையும், இயற்கை வாழ் உயிரினங்களையும், மரங்களையும் காப்பாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நூலகம் வேண்டும்

கரூர் மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் 22 வகையான மாற்றுத்திறனாளிகளின் உள்ளடக்கிய பிரத்யேக வசதி கொண்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று வழங்கிட வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாடு குடிசை மாற்றுவாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உறுதிப்படுத்தி ஊதியத்தை உயர்த்தி ரூ.675-ஆக வழங்கிட வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும், ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை பரிந்துரை செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

கரூர் எஸ்.வெள்ளாளபட்டி, சணப்பிரட்டி கிராமம், தில்லைநகர் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14, 15-வது வார்டு, 3-வது மண்டலம், தில்லைநகர் கிழக்கு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பாக செய்து கொடுத்திட வேண்டிய அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்து கொடுத்திடாமல், பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி, குடிநீர் வரிகளை வசூலித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்த பகுதிகளை தாங்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளான பொதுசுகாதாரம், சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்கு வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்