கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 61 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 45 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
குடிநீர் வசதி வேண்டும்
கூட்டத்தில், வேட்டமங்கலம் (மேற்கு) கிராமம், நொய்யல் குறுக்குச்சாலை பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊருக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, தொட்டி உடைந்து எங்களுக்கு கடந்த 26-ந்தேதி முதல் தண்ணீர் கிடைக்கவில்லை.
மேலும், நொய்யல் ஆற்றுநீரில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவு கலந்து மாசுபட்டதாலும், நிலத்தடி நீர் உப்பு ஆனதாலும், நாங்கள் குடிக்கவோ, குளிக்கவோ அதனை பயன்படுத்த முடியவில்லை. எனவே 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி புதிதாக கட்ட வேண்டும். அதுவரை மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மயானத்தில் வசதி இல்லை
தலித் விடுதலை இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நொய்யல் அருகே அத்திப்பாளையம் ஊராட்சி வல்லாகுளத்துப்பாளையம் காலனியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தில் மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. மயானத்தை சுற்றி முட்புதர்களும், செடி, கொடிகளும் அதிகளவில் வளர்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் தகனமேடை அமைப்பதோடு, போதிய வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டிடம்
மண்மங்கலம் வட்டம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெரூர் தென்பாகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் படித்து வருகிறார்கள். தற்போது இப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. இப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு போதிய இடவசதி உள்ளது. எனவே இந்த ஆண்டில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.