குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-09-05 18:11 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 361 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 39 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உதவித்தொகையை உயர்த்த வேண்டும்

இக்கூட்டத்தில் தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழக கிளையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ரூ.1,000 மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் ரூ.1,000-த்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது வழங்கப்படுகிற உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்