வால்பாறையில் குறைதீர்ப்பு முகாம்:-மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-சப்-கலெக்டர் பிரியங்கா வழங்கினார்
வால்பாறை
வால்பாறையில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் பிரியங்கா வழங்கினார்.
குறைதீர்ப்பு முகாம்
வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரி ஜெயந்தி, தாசில்தார் (பொறுப்பு) அருள்முருகன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பொள்ளாச்சி சப் -கலெக்டர் பிரியங்கா நேரடியாக மனுக்களை பெற்று அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார். வால்பாறை தாசில்தாரிடம் வேறு எந்த துறைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளும் நலத்திட்டங்களும் பெற்றுத்தர முடியும் என்பதையும், வால்பாறை தாலுகா பகுதியில் அரசின் உதவிகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மனுக்கள் கொடுத்த மாற்றுத்திறனாளிகள்
முகாமில் 53 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், இலவச பஸ் பாஸ், தையல் எந்திரம், காது கேட்கும் கருவி, பெட்டிக்கடை நடத்துவதற்கு அனுமதி, வேலை வாய்ப்பு மற்றும் நிதிஉதவி கேட்டு மனு கொடுத்தனர்.
முகாமில் வில்லோணி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த கண்மணி என்ற மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியையும், ரூபாய் 5 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவியை மற்றொரு பெண்ணுக்கும் பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் மற்றும் வால்பாறை தாசில்தார் அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனர்.