பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இருப்பினும் உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-11-13 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இருப்பினும் உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தேயிலை விவசாயம்

கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்தது. இதன் காரணமாக தேயிலை உள்பட அனைத்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் அதிக கனமழையால் பச்சை தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து குறைந்தது.

இதற்கு ஏற்ப போதிய விலையும் கிடைக்காததால் பராமரிப்பு செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு சிறு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான தோட்டங்கள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்தனர். சில இடங்களில் சொற்ப வருவாயை கொண்டு விவசாயிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டும் வழங்கி வந்தனர்.

மகசூல் அதிகரிப்பு

இதனிடையே போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகள் கொப்புள நோய் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மழை இல்லாமல் பகலில் கடும் வெயில் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் பனிப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும் தேயிலை விளைச்சல் எதிர்பார்த்த வகையில் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செடிகளில் பச்சை தேயிலை மகசூல் பரவலாக அதிகரித்து உள்ளது. நேற்று மிதமான வெயில் தென்பட்டது. மழை மற்றும் வெயில் என இருந்ததால் தேயிலைச் செடிகளுக்கு ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஏற்ப தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்