தி.மு.க.வில் அதிக அளவில் மகளிரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வில் அதிக அளவில் இளைஞர்களையும், மகளிரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-08 18:45 GMT

தி.மு.க.வில் அதிக அளவில் இளைஞர்கள், மகளிரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்  பேச்சு

அப்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பா.ஜனதா ஆட்சி நினைக்கிறது. இதனை உணர்ந்து நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். தி.மு.க.வில் அதிகளவில் இளைஞர்கள் மற்றும் மகளிரை சேர்க்க வேண்டும். வீட்டில் இருந்தவாறே உறுப்பினர்களை சேர்க்க கூடாது. அனைவரும் களத்தில் சென்று ஒவ்வொரு வரையும் நேரில் சந்தித்து உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தி.மு.க பூத் கமிட்டியில் வலுவான நபர்களை சேர்த்தால் தான் நாடாளுமன்ற தேர்தலில் விழிப்புடன் செயல் பட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், சோபியா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், அருண்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்