கல்லறை திருநாள் அனுசரிப்பு

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.

Update: 2022-11-02 19:56 GMT

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு இருந்தன. தஞ்சை தூயபேதுரு ஆலய கல்லறை தோட்டம், தஞ்சை திரு இருதய பேராலய கல்லறை தோட்டம், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டம், புனித வியாகுல அன்னை ஆலய கல்லறை தோட்டம், மிக்கேல் சம்மனசு கல்லறை தோட்டம் உள்பட அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது முன்னோர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் வழிபட்டனர்.

கண்கலங்கினர்

இதில், முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை கல்லறை முன்பு படைத்து வழிபட்டனர். சிலர் முன்னோர்களை நினைத்து கண்கலங்கினர். கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்கள் முன்பு ஏராளமான பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மெழுகுவர்த்திகளும் விற்பனை செய்யப்பட்டன.

பூண்டி மாதா பேராலயம்

கிறிஸ்தவர்கள் தாங்கள் இறந்த மூதாதையர்கள், உறவினர்களை நினைவு கூறும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களை நினைத்து வழிபடுவது வழக்கம்.

கல்லறை திருநாளான நேற்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

கல்லறையை புனிதம் செய்தனர்

திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலய உட்பகுதியில் உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் கல்லறையை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்தார். கல்லறை திருநாளை முன்னிட்டு அருட் தந்தை லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பூண்டி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள பேராலய‌ பங்குத்தந்தையாக பணியாற்றி மறைந்த அருட்தந்தை ராயப்பர் கல்லறையை புனிதம் செய்தனர்.

தொடர்ந்து பூண்டி பேராலய பங்குடன் இணைந்து உள்ள கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள் புனிதம் செய்யப்பட்டது. இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.

கும்பகோணம்

கல்லறை திருநாளையொட்டி கும்பகோணம் தூய இருதய ஆலய கல்லறை தோட்டத்தில் புல் மற்றும் செடி, கொடிகளை அகற்றி, சுண்ணாம்பு தெளித்து சீரமைத்தனர். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மலர்களால் அலங்காரம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து வழிபட்டனர். இதேபோல் கும்பகோணம் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை மலரால் அலங்கரித்து வழிபட்டனர்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பங்குத்தந்தை ஜான் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு மற்றும் அருட் தந்தையர்கள், கன்னியர்கள் ஆகியோர் சிறப்பு பாடல் திருப்பலியை நிறைவேற்றினர். அதன் பின்னர், உணவு பதார்த்தங்கள் துணி, மணிகள் ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்