ராணுவ வீரரின் மனைவிக்கு ரூ.1 லட்சம் கருணைத் தொகை

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ரூ.1 லட்சத்துக்கான கருணைத் தொகையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

Update: 2023-02-20 18:45 GMT

நாகர்கோவில்:

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ரூ.1 லட்சத்துக்கான கருணைத் தொகையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

277 பேர் மனு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது அவரிடம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 277 பேர் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் திருவட்டார் தாலுகா அயக்கோடு கிராமத்தை சேர்ந்த படைவீரர் அவில்தார் கிருஷ்ண பிரசாத் ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பயங்கரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரமரணம் அடைந்ததைத்தொடர்ந்து அவருடைய மனைவிக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையால் நிர்வகிக்கப்படும் தொகுப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான கருணைத்தொகையை மூன்று ஆண்டுகளுக்குப் பின் பெறும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்பு நிதியாக மாற்றி, வைப்பு நிதி ரசீதை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையையும் அவர் வழங்கினார்.

அதன் பிறகு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர், அலுவலக செயல்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் சேதுராமலிங்கத்திடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, உதவி இயக்குனர் (முன்னாள் படைவீரர் நலன்) சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்