2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் மானியங்கள் வழங்கும் பணி
மாநில அளவில் 2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் மானியங்கள் வழங்கும் பணியை சூளகிரியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்.
சூளகிரி:
மாநில அளவில் 2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் மானியங்கள் வழங்கும் பணியை சூளகிரியில் அமைச்சர்கள் தா.மோஅன்பரசன், ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்.
தானியங்கி பட்டு நூற்பாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெத்தசிகரலபள்ளி கிராமத்தில் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி பட்டு நூற்பாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி,ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, சூளகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் 2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ 10 கோடியே 96 லட்சம் அளவிலான மானியங்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். முதல்கட்டமாக 550 பட்டு விவசாயிகளுக்கு ரூ..7 கோடியே 46 லட்சம் மானியத்திற்கான காசோலைகளை பயனாளிகளுக்கு அவர்கள் வழங்கினர்.
மானியம்
விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
நடப்பாண்டு 2022-23-ம் நிதி பட்ஜெட்டில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு தொழில் முனைவர்களுக்காக ரூ.18 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2,384 பட்டு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 96 லட்சம் மானியம் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் 5,000 ஏக்கரில் மல்பெரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2,550 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி நடவு செய்த 1,975 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 4 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில், தமிழகம் முழுவதில் இருந்தும் இங்கு வந்துள்ள 409 விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த விழாவில் 550 பட்டு விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 46 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பெத்தசிகரலப்பள்ளியில் 400 முனைகள் கொண்ட புதிய தானியங்கி பட்டு நூற்பாலை, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ரூ. 1 கோடியே 5 லட்சம் மானியத்துடன் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.37 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பட்டு நூற்பாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
9 திட்டங்கள்
இந்த நூற்பாலையானது, ஒரு நாளைக்கு 780 கிலோ வெண்பட்டு கூடுகளை கொண்டு 120 கிலோ கச்சா பட்டு நூலினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் 500 விவசாயிகள் பயனடைவார்கள். கடந்த 2021-22-ம் பட்ஜெட்டில் பட்டு வளர்ச்சித்துறையில் ரூ.18 கோடியே 68 லட்சம் கோடி அறிவிக்கப்பட்ட 9 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் தொடர்ந்து திட்டங்களாக அறிவித்து நிறைவேற்றி வருகிறது.
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி பட்டு உற்பத்தியில் தமிழகத்தை தன்னிறைவு அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி, மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.