500 வகை சீர்வரிசைகளுடன் பிரம்மாண்ட திருமண நிச்சயதார்த்த விழா
ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் 500 வகை சீர்வரிசை பொருட்களை எடுத்து சென்று பிரம்மாண்ட முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் 500 வகை சீர்வரிசை பொருட்களை எடுத்து சென்று பிரம்மாண்ட முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
500 வகை சீர்வரிசை பொருட்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கோவில் திருவிழாக்கள், திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளை தனித்துவம் மிக்க பாரம்பரியத்துடன் பிரம்மாண்டமான முறையில் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரத்தநாடு அருகே நடந்த திருமண நிச்சயதார்த்த விழா பிரம்மாண்ட முறையில் நடந்துள்ளது.
இந்த விழாவில் 15 டிராக்டர்களில் 500 வகை சீர்வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டார் எடுத்துச்சென்று திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
திருமண நிச்சயதார்த்தம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், இவரது உறவுக்கார பெண்ணிற்கும் சமீபத்தில் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
இந்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து 15 டிராக்டர்களில் சீர்வரிசை தட்டுகளை ஏற்றி வந்தது பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.
மேலும் திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் 500 வகையான சீர் வரிசை தட்டுக்களுடன் வாணவெடிக்கை முழங்க ஊர்வலமாக சென்று திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்தினர். இந்த விழாவில் உறவினர்கள், ஊர் பெரியவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரது முன்னிலையிலும் திருமண நிச்சய தாம்பூலம் மணமக்கள் வீட்டார்களால் மாற்றிக் கொள்ளப்பட்டது.
சமூக வலைதளங்களில்...
இந்த பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழாவின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பலரும் வியந்து பார்வையிட்டு வருகிறார்கள்.