அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-03-20 18:25 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான நாளை (புதன்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் விவாதிக்கப்படும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்