121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
குடியரசு தினத்தையொட்டி 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில்நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டார். கூட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என்றும், அரசின் நலத்திட்டங்கள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி பேசினர். மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் கிராம சபை கூட்டங்களில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு உறுதிமொழி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ விருந்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.