மானிய விலையில் உளுந்து, பச்சை பயறு விதைகள்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயறு விதைகள் வழங்கப்படுகிறது என நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-01 18:45 GMT

நீடாமங்கலம்:

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயறு விதைகள் வழங்கப்படுகிறது என நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா, தாளடி சாகுபடி

நீடாமங்கலம் வட்டாரத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 45,682 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் வகையில் நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் திட்டத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி உள்ளது.

மானிய விலையில் விதைகள்

இத்திட்டத்தின் மூலம் உளுந்து மற்றும் பச்சைபயிறு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.50 அல்லது ரூ.48 மானிய தொகையில் விதைகளை பெற்றுக் கொள்ள இயலும்.

நீடாமங்கலம், வடுவூர், கருவாக்குறிச்சி மற்றும் தேவங்குடி வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் அட்டை நகல்களை கொடுத்து உளுந்து மற்றும் பச்சைபயறு விதைகளை மானிய விலையில் உடனே முன் பதிவு செய்து இருப்பு முடிவதற்குள் பெற்று பயனடையலாம். .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்