மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதைகள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-28 18:45 GMT

நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயறுவகை பயிர்கள்

நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி பருவத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடிசெய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் சம்பா நெற்பயிர் அறுவடைக்குபின் பயறுவகை பயிர்கள் அனைத்து கிராமங்களிலும் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி நெல்லுக்குபின் பயறுவகை பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்வதால் ஒரேபயிர் தொடர்ந்து சாகுபடி மேற்கொள்வது தவிர்க்கப்படுகிறது. நெல் வயல்களில் மாற்றுப் பயிர் சாகுபடிசெய்யப்படுவதால் நீர் பயன்பாடு குறைக்கப்பட்டு நீர் வளம் சேமிக்கப்படுகிறது.

மண்வளம் மேம்படும்

பயிரிடப்படும் உளுந்து பயிர்களின் அறுவடைக்குப்பின் அதன் தழைகளை வயல்களில் மடக்கி உழுவதால் மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. பயிர் சுழற்சி முறையினால் வயல்வெளிகளில் பூச்சிநோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. பயறுவகை பயிர் குறுகியகால பயிர் என்பதால் சம்பா பருவத்தில் நெல்லுக்கு இடப்படும் உரத்தில் எஞ்சி இருக்கும் உரத்தினை பயன்படுத்தி வளர்வதால் உர செலவு வெகுவாக குறைக்கப்படுகிறது.உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிரிடுவதால் நுண்ணுயிரிகளால் உருவாகும் வேர் முடிச்சுகளால் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

மானிய விலையில் விதைகள்

இந்த திட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு உளுந்து மற்றும் பச்சைப் பயறு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்