உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்ம சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-29 20:34 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உடல் கருகிய நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி பெண்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி வள்ளளார் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60). பிளம்பரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இவருடைய மனைவி சுந்தரி (55). இவர்களுடைய மகள் சுபா (24). இவர் பி.காம். சி.ஏ. பட்டப்படிப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

உடல் கருகிய நிலையில்...

நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் வழக்கம்போல் தூங்கினர். வீட்டின் சமையல் அறை அருகில் உள்ள கதவு இல்லாத அறையில் சுபா தூங்கினார். மற்றொரு அறையில் பெற்றோர் தூங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் தந்தை சேகர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த பிரார்த்தனைக்கு சென்றார். பின்னர் அவர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டில் சுபா உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சமையல் அறையில் பிரிட்ஜில் இருந்த ஸ்டெபிலைசர் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது. மேலும் கிரைண்டர், சுவிட்ச் போர்டு, சைக்கிள், குடை போன்றவையும் தீயில் கருகி கிடந்தது.

போலீசார் விசாரணை

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் மற்றும் தாயார் கதறி அழுதனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜி ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இறந்த சுபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சுபா தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு ஸ்டெபிலைசர் வெடித்தில் அவர் உடல் கருகி இறந்தாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்