கொடைக்கானலில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை

கொடைக்கானலில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-12-13 17:12 GMT

கொடைக்கானலில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆண் பிணம்

கொடைக்கானலை அடுத்த பூம்பாறை கைகாட்டி பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு, கொடைக்கானல் காந்திஜிநகரை சேர்ந்த முத்துசாமி (53) என்பவர் வந்தார். அப்போது அவர், பூம்பாறையில் இறந்து கிடந்தவர் தனது தம்பி என்றார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், இறந்துகிடந்தவர் கொடைக்கானல் காந்திஜிநகரை சேர்ந்த மணிகண்டன் (49). பி.காம். பட்டதாரி என தெரியவந்தது.

தற்கொலை

மணிகண்டனுக்கும், உடுமலைப்பேட்டையை சேர்ந்த அம்பிகா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதில் இருந்து மணிகண்டன் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தனது அண்ணன் முத்துசாமி வீட்டில் மணிகண்டன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் மணிகண்டன் பல்வேறு இடங்களில் வேலையில் சேர முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மேலும் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் தனது அண்ணனிடம் வேலை தேட செல்வதாக கூறிவிட்டு மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் பூம்பாறை பகுதிக்கு சென்று, விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்