முன்னாள் காதலியின் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி வாலிபர் கைது

முன்னாள் காதலியின் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-30 19:10 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே மாடூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் விஷ்வா (வயது 22) பி.சி.ஏ.பட்டதாரி. இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான 21 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி அந்த இளம் பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இது பற்றி அறிந்த விஷ்வா, தானும், அந்த இளம்பெண்ணும் காதலித்த போது ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாப்பிள்ளை உடனே திருமணத்தை நிறுத்தினார்.

கைது

இதனிடையே விஷ்வா அந்த இளம்பெண்ணிடம் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும். அவ்வாறு தரவில்லையென்றால், இதேபோல் உனக்கு யாருடனும் திருமணம் நடைபெறாத வகையில் செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்