கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி

கழிவுநீர் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவிட்டார். மேலும் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

Update: 2023-04-19 18:45 GMT

பொள்ளாச்சி

கழிவுநீர் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவிட்டார். மேலும் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். இதை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி விண்ணப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெற்றவர் தவிர வேறு யாரும் நகராட்சி பகுதிகளில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீரை அகற்றக்கூடாது.

உரிமம் ரத்து

மேலும் உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு காப்பீடு வசதி செய்ய வேண்டும். கழிவுநீர் அகற்றும் நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் விதிக்கப்படும். 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிமமும் ரத்து செய்யப்படும். பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அகற்றப்படும் கழிவுநீரை அழகாபுரி வீதியில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர்நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்