வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சலுகைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சலுகைகளை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சலுகைகளை தமிழக அரசே நிர்ணயித்து, தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி செயலாளர் மூகாம்பிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதுடன், நவீனத் தீண்டாமைக்கு உட்படுத்துவது வேதனைக்குரியது. மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி, வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சலுகைகளை தமிழக அரசே நிர்ணயித்து, தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஏராளமான வீடுகளில், குறிப்பாக மேல்நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப்போகும் குடும்பங்களில் வீட்டுவேலைக்காக தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். பெரும்பாலும் பெண்களே இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். அதுவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே வீடுகளில் வேலைக்குச் சேருகின்றனர்.
ஆனால், வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாதம் ஒருநாள் கூட விடுப்பு தரப்படுவதில்லை. அவசரத்துக்கு முன்பணம் கேட்டால், கொடுப்பதில்லை, மிக அதிக வேலை கொடுக்கிறார்கள் என்றெல்லாம் புகார்கள் எழுகின்றன. உரிமைகளைக் கேட்பவர்கள் உடனடியாக பணியை விட்டு நிறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அதுமட்டுமின்றி, வீடுகளில் நவீனத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தனி டம்ளர், தட்டு ஒதுக்கி, அவற்றை வெளியில் கொண்டுசென்று கழுவ வைப்பதாகவும் புகார்கள் உள்ளன. பூனை, நாயைத் தொட்டுப் பேசும் சிலர், தொழிலாளர்களை தொடக்கூட கூச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரோக்கியம் என்று கூறி, நவீன முறையில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று வீட்டுவேலைத் தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். வீடுகளில் மீதமாகும் உணவைத் தரும்போதுகூட, பிளாஸ்டிக் கவர் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் போட்டுத் தருகின்றார்களாம்.
வார விடுப்புகூட கொடுக்காமல், கொத்தடிமைபோல வேலை வாங்குவதாகவும், அவசரத்துக்குக்கூட விடுப்பு கொடுப்பதில்லை, அப்படியே விடுப்பு கொடுத்தாலும், அடுத்த நாள் பணிக்கு வரும்போது எரிந்து விழுகின்றனர் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர் தொழிலாளர்கள். இதுபோன்ற கொடுமைகள் தொடர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு, குறைந்தபட்ச சம்பளம், விடுமுறை, சலுகைகள் போன்றவற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளைப்போல, வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதேபோல, அவர்களுக்கான வார விடுப்பு மற்றும் பிற சலுகைகளையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வீட்டுவேலை செய்யும் பணியாளர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் பிற தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகள், சலுகைகளை வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்த அரசியல்வாதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அதிகம் கல்வி கற்காத பெண்களை உழைப்புச் சுரண்டலில் இருந்து தடுத்து, கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைந்துள்ள வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, இதுவரை சேராதவர்களையும் அதில் சேர்த்து, நல வாரியத்தின் பயன்கள், சலுகைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக உரிய சட்டம் இயற்றி, நாட்டிலேயே முன்மாதிரியாகத் திகழ தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.