'நெக்ஸ்ட்' என்ற தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

‘நெக்ஸ்ட்' என்ற தேசிய மருத்துவத் தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-06-13 23:34 GMT

சென்னை,

இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள 'நெக்ஸ்ட்' என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ தகுதித்தேர்வுக்கு எங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்காக 'நீட்' மற்றும் 'நெக்ஸ்ட்' என்ற எந்த வகையான தேர்வு என்றாலும் அதை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

கடுமையான பயிற்சி

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 'நெக்ஸ்ட்' தேர்வை அறிமுகப்படுத்துவது, கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக் கல்வியின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்ச்சி முறை மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ கல்விக்கான பாடத் திட்டம், தேசிய மருத்துவக் கழகத்தின் விதிகளின்படி திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள், பயிற்சி மற்றும் தேர்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மருத்துவ பல்கலைக்கழகங்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடுமையான பயிற்சி, தேர்வு முறைகள் ஆகியவற்றை முடித்த பிறகுதான் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டும்

இந்த சூழ்நிலையில் பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் வைக்கப்படும் தேர்வுகள், மாணவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே படிப்பு தொடர்பான அழுத்தங்கள், சுமைகள் போன்றவற்றை கணக்கிட்டால் இதுபோன்ற தேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை கட்டாயப்படுத்துவது அவர்களின் ''கிளினிக்கல்'' படிப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஏனென்றால், நுழைவுத் தேர்வுக்காக அவர்கள் அதிகமாக 'தியரி" கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டியதாகிவிடும். இது அவர்களின் கல்வித் திறனை பாதிக்கும். எனவே மாணவர்களுக்கும் மாநிலத்திற்கும் 'நெக்ஸ்ட்' தேர்வை அறிமுகம் செய்வது தேவையற்றது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மருத்துவப் பிரிவில் மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ள பங்களிப்பை நீர்த்துப் போகச் செய்ய இந்த முயற்சி எடுக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது.

எனவே, ஏற்கனவே உள்ள தேர்வு முறையை நீடிக்கச் செய்து, 'நெக்ஸ்ட்' தேர்வை அறிமுகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்