அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிப்பதை கைவிட வேண்டும்- சீமான்
சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, அங்குப் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் மீது பழி சுமத்தி, அவர்களைப் பணியிடமாற்றம் செய்து தண்டிக்கும் எதேச்சதிகார போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப் பான்மையேயாகும். எனவே, அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர்-செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல.
அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயமாகும்? ஆகவே, வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.