ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை கொலை:'நகை, பணத்தை திருடுவதற்காக கத்தியால் குத்திக்கொன்றேன்'கைதான கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

நகை, பணத்தை திருடுவதற்காக அரசு பள்ளி ஆசிரிையயை கத்தியால் குத்திக்கொன்றேன் என்று கைதான கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-08-25 22:02 GMT

நகை, பணத்தை திருடுவதற்காக அரசு பள்ளி ஆசிரிையயை கத்தியால் குத்திக்கொன்றேன் என்று கைதான கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆசிரியை படுகொலை

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). இவர் ஈரோடு வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 20-ந் தேதி மனோகரன் வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். நடைபயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது புவனேஸ்வரி தனது படுக்கை அறையில் கட்டிலில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை அப்படியே இருந்தது.

4 தனிப்படை அமைப்பு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

மோப்பநாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கார் டிரைவர் கைது

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும்் ஆய்வு செய்தனர். ஆனால் 4 நாட்களுக்கு மேலாக எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு முக்கிய தடயம் சிக்கியது. அதன்பேரில் ஆசிரியை புவனேஸ்வரி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ஈரோடு அருகே உள்ள பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (52) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

வீட்டை நோட்டமிட்டார்

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிரியை புவனேஸ்வரியின் வீட்டின் மேல் மாடியில் பல்ராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரும், ஜெயக்குமாரின் மனைவியும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். இதனால் பல்ராமிற்கும், ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருந்துள்ளனர். எனவே அவர் பல்ராமை சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது ஆசிரியை புவனேஸ்வரியிடம் அதிக அளவு நகை, பணம் இருப்பது ஜெயக்குமாருக்கு தெரிந்தது. அவர் ஒவ்வொரு முறையும் ஆசிரியர் பல்ராம் வீட்டுக்கு வரும்போதும், புவனேஸ்வரியின் வீட்டையும் நோட்டமிட்டு சென்றுள்ளார்.

கொள்ளையடிக்க திட்டம்

ஆசிரியையும், அவருடைய கணவரும் மட்டுமே வீட்டில் வசிப்பதும், குழந்தைகள் யாரும் இல்லாததையும் சாதகமாக பயன்படுத்தி வீட்டில் புகுந்து பணம், நகைகளை கொள்ளை அடிக்க அவர் திட்டமிட்டார். இதற்காக அடிக்கடி அந்த பகுதியில் அவர் சுற்றி வந்தார். சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் ஆசிரியையின் கணவர் மனோகரன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார்.

அவர் கதவை பூட்டாமல் செல்வதை கவனித்த ஜெயக்குமார் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். அங்கு படுக்கை அறையில் இருந்த அலமாரியை திறக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தூங்கிக்கொண்டு இருந்த ஆசிரியை புவனேஸ்வரி கண் விழித்தார்.

கத்தியால் குத்தினார்

ஜெயக்குமாரை பார்த்த பயத்தில் புவனேஷ்வரி சத்தமிட்டார். அவர் தன்னை காட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்த ஜெயக்குமார், கையில் வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்தில் ஓங்கி குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் துடி துடித்து இறந்தபோது, கழுத்தில் கிடந்த 2 தங்க சங்கிலிகளை திருடிக்கொண்டு அங்கிருந்து ஜெயக்குமார் தப்பி ஓடினார். கிடைத்த தடயத்தை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கண்டுபிடித்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் தனிப்படை போலீசார் உடனிருந்தனர்.

வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, 'எனக்கு ரூ.15 லட்சம் கடன் இருந்தது. அதை அடைப்பதற்காக நகை மற்றும் பணத்தை திருட முயன்றேன். அப்போது புவனேஷ்வரி சத்தமிட்டார். உடனே தலையணையால் அவரின் முகத்தை அழுத்தினேன். பின்னர் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் இருந்து, 8¼ பவுன் நகை மற்றும் புவனேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்