போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு வேலை

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Update: 2023-04-26 19:24 GMT

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து 30 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 25 முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

போட்டித்தேர்வு

முன்னாள் படை வீரர்கள் வழங்கிய மனுவில் பெரும்பாலானவர்கள், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். அரசு வேலை என்பது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கிடைக்கும். ஆகவே போட்டித் தேர்வுகளுக்கு தங்களின் வாரிசுதாரர்களை கலந்து கொள்ள தயார் செய்ய வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கி மூலமாக சுயதொழில் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. இவைகளில் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுய தொழில்

மேலும் சுய தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து சுயதொழில் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். இது போன்று அரசு வழங்கும் திட்டங்களில் பயன் பெறலாம்.

பட்டா வேண்டி வழங்கப்பட்ட மனுக்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு என தனியாக முன்னாள் படை வீரர்கள் நலஉதவி இயக்குனர் அலுவலகம் அமைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் மட்டுமே அதை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் லெப்டினன்ட் கமாண்டர் ஞானசேகரன், கேப்டன் சாமுவேல், அலுவலக கண்காணிப்பாளர் லதா மற்றும் முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்